சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகே உள்ள செல்வநகர் பகுதியில் ஒரு மர்ம நபர் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 4 மாதங்களாக இந்த வீட்டில் இருந்துள்ளார். இவரது வீட்டில் சிம்பாக்ஸ் என்ற சட்ட விரோதமாக செல்போன் இணைப்பின் மூலம் வெளிநாட்டு அழைப்புகளை, உள்நாட்டு அழைப்புகளாக மாற்றி மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனை தொலைதொடர்பு துறை அலுவலக சோதனைகளில்  கண்டுபிடித்துள்ளது. மேலும் இது பற்றி தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு நேற்று சென்றனர். அப்போது அந்த நபர் இருந்த வீடு பூட்டப்பட்டு இருந்தது. உடனே அந்த பூட்டை உடைத்த போலீசார் உள்ளே சென்று பார்த்த போது அங்கு செல்போன் எண்களை ஹேக்கிங் செய்ய பயன்படும் 16-க்கும் மேற்பட்ட சிம்பாக்ஸ்கள், 300-க்கும் மேற்பட்ட சிம்கார்டுகள் மற்றும் செல்போன்கள் இருந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் அனைத்தையும் பறிமுதல் செய்தனர்.

பின்னர் அந்த மர்ம நபர் யார் என்றும் அவருக்கும் தீவிரவாத அமைப்புக்கும் ஏதாவது தொடர்பு உண்டா ? என தீவிர விசாரணையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அந்த நபர் பெங்களூரில் வசிக்கிறார் என்பதும் போலி அடையாள அட்டையின் மூலம் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு அந்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.