தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று தென்மேற்கு வங்கக்கடலில் புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இந்த புயலுக்கு மிக்ஜாம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 4-ஆம் தேதி அதிகாலை தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டி இருக்கும் வட தமிழக கரையை அடையும் எனவும், 5-ஆம் தேதி அதிகாலை நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினம் இடையே புயலாக மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இருக்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  டிசம்பர் 4-ஆம் தேதி(நாளை) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.