ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள களிமண்குண்டு கிராமத்தில் காளிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் முனீஸ் பாலா அப்பகுதியில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த 2 நாட்களுக்கு முன்பு முனீஸ் பாலா பள்ளிக்கு சென்ற வகுப்பறையில் அமர்ந்தான்.

இதனையடுத்து மேஜையில் உள்பகுதியில் தற்செயலாக புத்தகத்தை எடுப்பதற்காக கையை விட்ட போது ஏதோ கடித்தது. இதனால் உடனே கையை உதறிக் கொண்டு வெளியே எடுத்த பாலா பாம்பு நெளிந்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக மாணவர்கள் ஒன்று சேர்ந்து அந்த பாம்பை லாவகமாக பிடித்து ஒரு பாட்டிலில் அடித்தனர். இதற்கிடையே ஆசிரியர் முனீஸ் பாலாவை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

அதேபோல பாட்டிலில் அடைக்கப்பட்ட பாம்பையும் எடுத்து வந்தனர். அது விஷப்பாம்பு என்பதை அறிந்த டாக்டர்கள் மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். தற்போது பாலாவின் உடல் நலம் தேறியிருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.