
தென்காசி மாவட்டத்திற்கு அருகே உள்ள வல்லம் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் சுவாமி. இவர் வெளிநாட்டில் வசித்து வருகிறார். இவருக்கு செங்கோட்டையை சேர்ந்த காளிதாஸ் என்ற கார் டிரைவர் அடிக்கடி வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வரும்போது பழக்கமாகியுள்ளார்.
நீண்ட நாள் பழக்கம் என்பதால் ராமச்சந்திரன் காளிதாஸ் மூலம் சில இடங்களை உள்ளூரில் வாங்கியுள்ளார். அதன் பிறகு ராமச்சந்திரன் தான் வாங்கி வைத்துள்ள ஒரு இடத்தை விற்பனை செய்ய வேண்டும் என காளிதாசிடம் உதவி கேட்டுள்ளார். அதற்கு காளிதாஸ் விற்று தருவதாகவும், அந்த நிலத்தின் பவர் பட்டாவை தனது பெயருக்கு எழுதிக் கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அதன்படி ராமச்சந்திரன், காளிதாஸ் பெயரில் எழுதிக் கொடுத்ததாகவும், ஆனால் அந்த இடத்தை விற்ற பணத்தை காளிதாஸ் நீண்ட நாட்கள் ஆக ராமச்சந்திரனுக்கு கொடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. ஏற்கனவே ராமச்சந்திரன் வங்கி கணக்கிலிருந்து அவரது ஒப்புதலின் பேரில் ரூபாய் 1 கோடியே 8 லட்சத்து 96 ஆயிரம் காளிதாஸ் எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ராமச்சந்திரன் நிலம் விற்பனை செய்த ரூபாய் 1 கோடியே 11 லட்சத்து 24 ஆயிரம் பணத்தை கேட்பதற்காக அடிக்கடி காளிதாசிற்கு ஃபோன் செய்துள்ளார் ஆனால் காளிதாஸ் ராமச்சந்திரனின் போனை எடுக்காமல் நிராகரித்துள்ளார். இதுகுறித்து நேரில் சென்று காளிதாசிடம் கேட்டபோது அரிவாளால் வெட்டி விடுவதாகவும், காரை ஏற்றி கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து ராமச்சந்திரன் தென்காசி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து காளிதாசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.