ஜார்கண்ட் மாநிலத்தில் காஸ் பகுதியில் தகவல் அறியும் உரிமைச் சட்ட அலுவலகத்தில் மனுக்களை நிர்வகிக்கும் கிளார்க்காக இஸ்லாமியர் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்த நபருக்கு நேரடியாக சென்று கிளார்க்  தகவலை அளித்துள்ளார். முதலில் போஸ்ட் மூலமாக தகவல் அனுப்பப்பட்டுள்ளது. அதில் குளறுபடிகள் இருப்பதாக மனுதாரர் மேல்முறையீடு செய்திருந்ததால் கிளார்க்கே நேரடியாக சென்று தகவல்கள் அடங்கிய ஆவணங்களை வழங்கியுள்ளார்.

இந்த சம்பவம் கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பரில் நடைபெற்றுள்ளது. இந்த ஆவணங்களை மனுதாரர் வாங்க மறுத்து கிளார்க் உடன் வாக்குவாதம் செய்துள்ளார். இந்த வாக்குவாதத்தின் போது இஸ்லாமிய கிளார்க்கை அவரது மதத்தை அடையாளப்படுத்தும் விதமாக”மியான் தியான்”என்றும் “பாகிஸ்தானி” என்றும் தகாதவாறு மத உணர்வுகளை அவமதிக்கும் வகையில் கூறியதாக கிளார்க் மேலதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் மனுதாரரை தொடர்பு கொண்டு பேசிய போது அவர் அதிகாரிகளையும் அவமதிப்பாக பேசியதால் மனுதாரர் மீது காவல்துறையில் FIR பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

மேலும் மனுதாரரின் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 298, பிரிவு 504, பிரிவு 353 ஆகியவற்றின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரட் நீதிமன்றம் மனுதாரருக்கு சம்மன் அனுப்பியது. ஆனால் மனுதாரர் ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதனைத் தொடர்ந்து 2023 ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் மனுதாரரின் மனுவை நிராகரித்தது. இதனை அடுத்து மனுதாரர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கு நேற்று மார்ச் 5ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டது. அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது, ஒரு நபரை மியான்- தியான் பாகிஸ்தானி என அவரது மத உணர்வுகளை அவமதிக்கும் படியாக பேசியவையாக இருந்தாலும், இது மத உணர்வுகளை புண்படுத்தும் சட்டப்பிரிவு 298 இன் கீழ் குற்றம் இல்லை எனக் கூறி தீர்ப்பளித்தது. இதனால் கிளார்க்கிடம் மதரீதியாக பேசி துன்புறுத்திய மனுதாரர் மீது உள்ள குற்ற வழக்கு ரத்து செய்யப்பட்டது.