
உலக கோப்பையில் தென்னாப்பிரிக்க அணியை 38 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது நெதர்லாந்து அணி.. உலக கோப்பையில் இந்த 2 அணிகளையும் 2 முறை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்துள்ளது நெதர்லாந்து அணி..
2023 உலகக்கோப்பையில் நேற்று 15 வது போட்டியில் தென்னாபிரிக்கா மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகள் ஹிமாச்சலப்பிரதேசம் தர்மசாலாவில் மோதியது. 2 மணிக்கு தொடங்க வேண்டிய இந்த போட்டி மழை காரணமாக 43 ஓவராக குறைக்கப்பட்டு தாமதமாக தொடங்கியது.. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது.. அதன்படி களமிறங்கிய நெதர்லாந்து அணியின் துவக்க வீரர்களான விக்ரம்ஜித் சிங் (2 ரன்கள்) மற்றும் மேக்ஸ் ஓ டவுட் (18 ரன்கள்) என விரைவில் விக்கெட்டை இழந்தனர். தொடர்ந்து வந்த பாஸ் டி லீடே 2, கொலின் அக்கர்மேன் 12, ஏங்கல்பிரெக்ட் 19, தேஜா நிடமானுரு 20, லோகன் வான் பீக் 10 என அனைவரும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை விட்டனர். நெதர்லாந்து அணி 33.5 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்தது.
இருப்பினும் மறுமுனையில் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் மட்டும் நிலைத்து நின்றார். அவருடன் வான் டெர் மெர்வே கைகோர்க்க, இருவரும் சிறப்பாக ஆடினர். எட்வர்ட்ஸ் பொறுப்புடன் ஆடி அரைசதம் கடந்தார். பின் அதிரடியாக விளையாடிய வான் டெர் மெர்வே (19 பந்துகளில் 29 ரன்கள்) 40வது ஓவரில் அவுட் ஆனார். பின் எட்வர்ட்ஸ் மற்றும் ஆர்யன் தத் கைகோர்த்து அதிரடியாக ஆடினர். ஆர்யன் அதிரடியாக 3 சிக்ஸர்களை பறக்க விட்டார்.
இறுதியில் நெதர்லாந்து அணி 43 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் எடுத்தது. எட்வர்ட்ஸ் 69 பந்துகளில் (10 பவுண்டரி, ஒரு சிக்சர்) 78 ரன்களுடனும், ஆர்யன் 9 பந்துகளில் 23 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர். 180 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி 9 ஓவர்களில் மட்டும் நெதர்லாந்து 109 ரன்கள் எடுத்து சிறப்பாக முடித்தது.

இதையடுத்து தென்னாப்பிரிக்க அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய தெம்பா பவுமாவும், குயிண்டன் டி காக்கும் பொறுமையாக இன்னிங்சை தொடங்கினர். பின் அக்கர்மேன் வீசிய 8வது ஓவரில் டி காக் (20 ரன்கள்) கீப்பர் எட்வர்ட்ஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். தொடர்ந்து கேப்டன் பவுமா (16 ரன்கள்) வான் டெர் மெர்வேவின் 10வது ஓவரில் போல்ட் ஆகி வெளியேறினார். பின் வான் மீகெரெனின் 11வது ஓவரில் எய்டன் மார்க்ரம் (1) கிளீன் போல்ட் ஆகி வெளியேற, தொடர்ந்து வான் டெர் மெர்வேவின் 12வது ஓவரில் ராஸ்ஸி வான் டெர் டுசென் 4 ரன்னில் வெளியேறினார். தென் ஆப்பிரிக்கா அணி 11.2 ஓவரில் 44 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறியது.
பின் ஹென்றிச் கிளாசன் மற்றும் டேவிட் மில்லர் இருவரும் கைகோர்த்து ஆடி வந்த நிலையில், கிளாசனும் 28 ரன்னில் வெளியேறினார். இதையடுத்து மார்கோ ஜான்சன் மற்றும் டேவிட் மில்லர் இருவரும் ஆடிவந்த நிலையில், வான் டெர் மெர்வேவின் 24 ஆவது ஓவரில் டேவிட் மில்லர் சிக்ஸர் அடிக்க முயன்று எல்லைக்கோடு அருகே கேட்ச் கொடுத்தார். அதனை பாஸ் டி லீடே தவற விட, அது பவுண்டரி சென்றது. பின் அடுத்த 25வது ஓவரில் மார்கோ ஜான்சன் 9 ரன்னில் போல்டாகி வெளியேறினார்.
இதயடுத்து டேவிட் மில்லர் மாற்றும் ஜெரால்ட் கோட்ஸி இருவரும் சேர்ந்து சிறிது நேரம் ஆடிய நிலையில், கடைசி முக்கிய விக்கெட்டாக மில்லரும் 43 ரன்களில் லோகன் வான் பீக்கின் 31வது ஓவரில் அடிக்க முயன்று போல்ட் ஆனார். பின் கோட்ஸி 22 ரன்கள், ரபாடா 9 ரன்கள் எடுத்து வெளியேறினர். கடைசியில் கேசவ் மஹாராஜ் அவரால் முடிந்த அளவிற்கு சிறப்பாக ஆடி 40 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். தென்னாப்பிரிக்க அணி 42.5 ஓவரில் 207 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 38 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணி வெற்றி பெற்றது. என்கிடி 7 ரன்களுடன் களத்தில் இருந்தார். நெதர்லாந்து அணியில் அதிகபட்சமாக லோகன் வான் பீக் 3 விக்கெட்டுகளும், வான் மீகெரென், வான் டெர் மெர்வே, பாஸ் டி லீடே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.
உலகக்கோப்பையில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி ஷாக் கொடுத்த நெதர்லாந்து அணி ஒரு சாதனையையும் நிகழ்த்தியுள்ளது. இது முதல் முறை அல்ல.. 2022 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் தென்னாப்பிரிக்கா அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நெதர்லாந்து அதிர்ச்சி கொடுத்தது. தற்போது 2023 உலக கோப்பையிலும் தென்னாபிரிக்காவை வீழ்த்தியுள்ளது. அதே சமயம் உலக கோப்பையில் பலம் வாய்ந்த இங்கிலாந்தை 2 முறையும், தென்னாப்பிரிக்காவை 2 முறையும் வீழ்த்தி சாதனை படைத்துள்ளது. இந்த உலக கோப்பையில் நெதர்லாந்து அணி 3 போட்டிகளில் விளையாடி முதல் வெற்றியை பதிவு செய்து புள்ளிபட்டியலில் 9வது இடத்தில் உள்ளது..
இந்த வெற்றி பெரிய அணிகளுக்கு எச்சரிக்கை கொடுக்கும் விதமாக உள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு தான் இங்கிலாந்தை ஆப்கானிஸ்தான் வீழ்த்தி இன்ப அதிர்ச்சி கொடுத்தது. தற்போது அதே போல மற்றொரு போட்டி அமைந்துள்ளது. எனவே எந்த அணியையும் குறைவாக எடை போட்டு விடக்கூடாது என்பதற்கு இது சான்றாக உள்ளது..
2009 டி20ஐ உலகக் கோப்பையில் இங்கிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நெதர்லாந்து.
இங்கிலாந்து 162/5 (20)
நெதர்லாந்து 163/6 (20)
2014 டி20ஐ உலகக் கோப்பையில் இங்கிலாந்தை 45 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நெதர்லாந்து.
நெதர்லாந்து 133/5 (20)
இங்கிலாந்து 88 (17.4)
2022 டி20 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நெதர்லாந்து.
நெதர்லாந்து 158/4 (20)
இங்கிலாந்து 145/8 (20)
2023 ஒருநாள் உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவை 38 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து தோற்கடித்தது.
நெதர்லாந்து 245/8 (43)
இங்கிலாந்து 207/8 (42.5)
Netherlands defeated England in the 2009 World Cup.
Netherlands defeated England in the 2014 World Cup.
Netherlands defeated South Africa in the 2022 World Cup.
Netherlands defeated South Africa in the 2023 World Cup.
– The giant slayers…!!! pic.twitter.com/NpuIy5ZTlg
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 17, 2023