இந்திய-பாகிஸ்தான் போட்டியின் போது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்களை குறிவைத்து தகாத முறையில் நடந்து கொண்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) புகார் அளித்துள்ளது..

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் கடந்த அக்டோபர் 14ஆம் தேதி உலக கோப்பையின் 12வது போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதியது. இப்போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி. அதுமட்டுமில்லாமல் இந்த மெகா போட்டியின் போது சில சர்ச்சை சம்பவங்களும் அரங்கேறியது. அதாவது, பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் டாஸ் போடும் போது, அவரை ரசிகர்கள் கோஷம் எழுப்பி தொந்தரவு செய்ததாகவும், அதுமட்டுமில்லாமல் கூட்டத்தின் ஒரு பகுதியினர் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் ஆட்டமிழந்த பிறகு பெவிலியனுக்கு நடந்து சென்றபோது “ஜெய் ஸ்ரீ ராம்” என முழக்கமிட்ட வீடியோவும் வைரலாகி சர்ச்சையை கிளப்பியது.

மேலும் பாகிஸ்தான் வீரர்கள் பீல்டிங் செய்யும் போதும் பேப்பர் ராக்கெட் விட்டு தொந்தரவு செய்தது என பல சம்பவங்கள் அரங்கேறியது. இப்போட்டியில் மைதானத்தில் இந்தியாவுக்கே ஆதரவு அதிகமாக இருந்தது. எங்கு பார்த்தாலும் நீல ஜெர்சியே கண்ணில் பட்டது. பாகிஸ்தான் ரசிகர்களை பார்க்க முடியவில்லை. பாகிஸ்தான் ரசிகர்களுக்கு விசா கிடைப்பதில் தாமதமே இதற்கு காரணம் என குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது.

பாகிஸ்தான் தோல்விக்கு பின் பாகிஸ்தான் அணியின் இயக்குனர் மிக்கி ஆர்தர், வழக்கமாக ஒவ்வொரு ஐசிசி நிகழ்விலும், எல்லைக்கு அப்பாற்பட்ட ரசிகர்கள் தங்கள் அணியை உற்சாகப்படுத்த அதிக எண்ணிக்கையில் வருகிறார்கள். ஆனால் இந்த முறை முற்றிலும் மாறுபட்டது. நேர்மையாகச் சொல்வதென்றால், இன்றிரவு நடந்த போட்டி ஐசிசி நிகழ்வாகத் தெரியவில்லை, இது இருதரப்புத் தொடராகவோ, பிசிசிஐ நிகழ்வாகத் தோன்றியது” என கூறியிருந்தார். இந்த கருத்து ஒருபுறம் விவாதத்தை கிளப்பியது.இதனிடையே சாரி பாகிஸ்தான் (#Sorry_Pakistan) என ட்விட்டரில் ட்ரெண்டானது. அதில், பலரும் அகமதாபாத்தில் சில ரசிகர்கள் இப்படி செய்தது வேதனை அளிப்பதாக தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

இந்த நிலையில் தான் அக்டோபர் 14-ம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டியின் போது அகமதாபாத் கூட்டத்தினர் தகாத முறையில் நடந்து கொண்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) ஐசிசியிடம் புகார் அளித்துள்ளது.

பிசிபி மீடியா தனது எக்ஸ் பக்கத்தில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தான் பத்திரிகையாளர்களுக்கான விசா தாமதம் மற்றும் 2023 உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் ரசிகர்களுக்கு விசா கொள்கை இல்லாதது குறித்து ஐசிசியிடம் மற்றொரு முறையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. அக்டோபர் 14, 2023 அன்று நடைபெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டியின் போது பாகிஸ்தான் அணியை குறிவைத்து முறையற்ற நடத்தை குறித்து பிசிபி புகார் அளித்துள்ளது” என தெரிவித்துள்ளது.