உலக கோப்பையில் நியூசிலாந்து அணி 149 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி முதலிடத்திற்கு சென்றுள்ளது.

2023 உலக கோப்பையில் இன்று சென்னை சேப்பாக் சிதம்பரம் மைதானத்தில் நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மதியம் 2 மணிக்கு மோதியது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்தின் துவக்க வீரர்களான டேவான்கான்வே மற்றும் வில் யங் இருவரும் களமிறங்கினர் இதில் கான்வே 20 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து ரச்சின் ரவீந்திரா மற்றும் வில் யங் இருவரும் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் ஆடினர். வில் யங் சிறப்பாக ஆடி அரைசதம் கடந்தார். பின் 21வது ஓவரில் 2வது விக்கெட் விழுந்தது. நியூசிலாந்து 109 ரன்களில் இருந்தபோது உமர் சாய் வீசிய அந்த ஓவரின் 2வது பந்தில் ரச்சின் 32 ரன்களில் போல்ட் ஆகி வெளியேறினார்.

பின் அதே ஓவரின் கடைசி பந்தில் வில் யங் 54 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து ரஷித் கான் வீசிய 22 ஆவது ஓவரில் டேரில் மிட்செல் ஒரு ரன்னில் வெளியேறினார். ஒரு ரன்னுக்குள் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தது. நியூசிலாந்து அணி 21.4 ஓவரில் 110 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்திருந்தது.. அப்போது கைகோர்த்த டாம் லேதம் மற்றும் கிளென் பிலிப்ஸ் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டு சென்றது.. இந்த ஜோடி 140 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தது.. இருவரும் அரை சதம் கடந்த நிலையில், பிலிப்ஸ் 48வது ஓவரில் அவுட் ஆனார். பிலிப்ஸ் 80 பந்துகளில் (4 பவுண்டரி, 4 சிக்ஸர்) 71 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார்.

தொடர்ந்து அதே ஓவரில் டாம் லேதம் அவுட்டானார். லேதம் 74 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார். கடைசியில் மார்க் சாப்மேன் 12 பந்துகளில் 25 ரன்களுடனும்,  மிட்செல்  சான்ட்னர் 7 ரன்களும் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தனர். இறுதியில் நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் குவித்தது. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 4 எளிமையான கேட்ச்களை கோட்டை விட்டது. இது கூடுதலாக 40 – 50 ரன்கள் செல்ல காரணம்..

பின்னர் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 34.4 ஓவரில் 139 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ரஹ்மத் ஷா 36 ரன்களும், ஓமர்சாய் 27 ரன்களும் எடுத்தனர். மற்றபடி யாரும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ரன்கள் எடுக்கவில்லை. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக மிட்செல் சான்ட்னர் மற்றும் லாக்கி பெர்குசன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். மேலும் ட்ரெண்ட் போல்ட் 2 விக்கெட் எடுத்தார். நியூசிலாந்து அணி 149 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி முதலிடத்திற்கு சென்றுள்ளது. நியூசிலாந்து அணி தொடர்ந்து 4 போட்டிகளில் 4 போட்டியும் வெற்றி பெற்றுள்ளது.