நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணப்புரத்தில் சவுரி ராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வருடம் தோறும் 15 நாட்கள் மாசி மக பெருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கடந்த 27-ஆம் தேதி இந்த ஆண்டுக்கான மாசி மக பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் ராதாகிருஷ்ணன், செயல் அலுவலர் குணசேகரன், தக்கார் முருகன், கோவில் தலைமை எழுத்தர் உமா மற்றும் கோவில் ஊழியர்கள் திருக்கண்ணபுரம் சுற்றுவட்டார கிராம பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.

விழா நாட்களில் தங்க பல்லக்கு, தங்க கருட சேவை மற்றும் பல்வேறு வாகனங்களில் பெருமாள் ஊதி வீதி உலா நடைபெற்றது. நாளை காலை சவுரிராஜ பெருமாள் புறப்பட்டு  திருமருகல் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு வந்து இரண்டு பெருமாள்களும் தீர்த்தவாரிக்கு திருமலை ராஜன் பட்டினம் கடற்கரைக்கு செல்லும் நிகழ்ச்சியும் அன்று மாலை கடற்கரையில் பெருமாள் கருட வாகனத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும்  நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து சவுரிராஜ பெருமாள் கோவில் முன் அமர்ந்துள்ள நித்திய புஷ்கரணி  திருக்குளத்தில் வருகிற 12-ம் தேதி இரவு 10 மணிக்கு தெப்ப திருவிழா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.