
மைசூர் சாண்டல் சோப்பின் புதிய பிராண்ட் தூதராக நடிகை தமன்னா பாட்டியா நியமிக்கப்பட்டது மற்றும் இதற்காக ரூ.6.2 கோடி வரை சம்பளம் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இதற்கிடையே, தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்துள்ள நடிகை சஞ்சனா கல்ராணி, இதனை எதிர்த்து விமர்சனங்களை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் தமன்னாவுக்கு எதிராக எதுவும் இல்லை என்றும், வாய்ப்பு கிடைப்பதில் பொறாமையும் இல்லை என்றும் தெரிவிக்கும் சஞ்சனா, “கர்நாடக மக்களின் வரிப்பணத்தில் இப்படி பெரும் தொகையை ஒரு விளம்பரத்துக்காக செலவிடுவது மிகுந்த நிதி வீணடிப்பாக இருக்கிறது” என கூறியுள்ளார்.
“இதை இலவசமாகவே யாரும் செய்ய முடிந்திருக்கலாம். ஒரு பிரபல நடிகரிடம் அரசாங்கம் கேட்டிருந்தால், அவர்கள் மக்களின் நலனுக்காக இதை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்து இருப்பார்கள். ஆனால் இப்போது ரூ.6 கோடி செலவழிக்கப்படுவது, பொது மக்களின் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை வீணடிக்கிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த தொகையை கொண்டு ஏராளமான நலத்திட்டங்களை செய்யலாம் என்றும், அந்த அளவுக்கு விளம்பரத்திற்காக செலவழிக்கவேண்டிய அவசியமில்லை என்றும் சஞ்சனா வலியுறுத்துகிறார்.அவரின் விமர்சனங்கள் பல தரப்பிலும் ஆதரவை பெற்று வருகின்றன.
குறிப்பாக தற்போது பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழையால் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் கடும் துன்பத்திற்கு ஆளாகி வருகின்றனர். சாலைகள் அழிந்துள்ளன, குடிசைகள் மூழ்கியுள்ளன. “அந்த ரூ.6 கோடி அந்த அவலநிலைக்குபாதிக்கப்பட்ட மக்களுக்கு செலவழிக்கப்பட்டிருந்தால், அது உண்மையான சேவையாக இருக்கும். ஆனால் இப்போது அது ஒரு நடிகைக்கு கொடுக்கப்பட்ட ஒரு சம்பளமாக முடிந்து போனது மிகுந்த வருத்தம் அளிக்கிறது” என சஞ்சனா கடுமையாக விமர்சித்துள்ளார்.