
உத்திரபிரதேச மாநிலத்தில் சைபர் மோசடி கும்பல் ஒன்று ஆதார் விவரங்களை சட்ட விரோதமாக மாற்றிய சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது உத்திர பிரதேச மாநிலம் படாயூன் மற்றும் அம்ரோஹாவில் சைபர் மோசடி என்பது அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் இப்பகுதியில் செயல்பட்ட சைபர் மோசடி கும்பல் கிட்டத்தட்ட 12 மாநிலங்களில் 1500 க்கும் மேற்பட்ட ஆதார் விவரங்களை சட்டவிரோதமாக மாற்றியுள்ளது.
இந்நிலையில் சைபர் மோசடியில் ஈடுபட்ட ஆசிஷ்குமார், தர்மேந்திர்சிங், ரௌநக்பால் மற்றும் காசிம் ஹூசைன் ஆகிய முக்கிய குற்றவாளிகளை காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் உண்மை தகவல்கள் வெளிவந்தது. இந்த கும்பல் ஆதார் விவரங்களை மாற்றுவதற்கு மக்களிடமிருந்து பணத்தை பெற்றுக்கொண்டு சட்டவிரோதமாக அதனை செய்து வந்துள்ளது. அதற்காக அவர்கள் ரூ 2000 முதல் ரூ 5000 வரை வசூலித்துள்ளனர்.
இந்நிலையில் போலி ஆதார் மட்டுமின்றி ரேஷன் கார்டு, பிறப்பு சான்றிதழ்கள், பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களையும் தயாரித்து கொடுத்துள்ளனர். இவர்கள் நிஜ ஆதார் ஆபரேட்டர்களின் கைரேகை பதிவுகளை சிலிக்கான் மூலம் உருவாக்கி ஸ்கேனர்களை மாற்றி அமைத்து பயோமெட்ரிக் பாதுகாப்புகளை தாண்டி ஆதார் சிஸ்டத்தில் இப்படி செய்துள்ளனர்.
இந்த மோசடி கும்பலில் கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றியுள்ளனர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் இது தொடர்பாக விரிவான விசாரணை நடந்து வரும் நிலையில் குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.