தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திருநெல்வேலியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்றார். அங்கு நதிநீர் இணைப்பு பணிகளை ஆய்வு செய்த துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நெல்லை மாவட்டத்தில் நதிநீர் இணைப்பு பணிகள் கடந்த 2007 முதல் 2011-ம் ஆண்டு வரை நடைபெற்று வந்தது. ஆட்சி மாற்றத்தினால் கடந்த 10 வருடங்களாக நதிநீர் இணைப்பு பணிகள் கிடப்பில் போடப்பட்டது.

இந்த பணிகள் மீண்டும் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு தொடங்கப்பட்டுள்ளது. இந்த வருடம் டிசம்பர் மாதத்திற்குள் நதிநீர் இணைப்பு பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும். அதன்படி நம்பியாறு கருமேனி ஆறு, தாமிரபரணி ஆறு ஆகிய மூன்று நதிகளும் இணைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும். மேலும் கனிம வளங்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்ட வாகனங்களை தவிர்த்து ராட்சச கனரக வாகனங்களில் கனிம வளங்களை ஏற்றி சென்றால் வாகனங்களை உடனடியாக பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.