தமிழக அரசு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இது குறித்து கால்நடை பராமரிப்பு துறையின் முதன்மை செயலாளர் கார்த்திக் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது, தனிநபரோ அல்லது ஒரு அமைப்பு குறிப்பிட்ட இடத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நடக்க விரும்பினால் அந்த போட்டி பற்றி அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் எழுத்துப்பூர்வமாக மனு கொடுத்து அதற்கான முன் அனுமதியை பெற வேண்டும். மேலும் மனுவில் போட்டி பற்றிய தன்மை மற்றும் வகைகள் பற்றி குறிப்பிட வேண்டும். இந்த வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்.
அதேபோல் 2017 மிருகவதை சட்டத்தில் தெரிவிக்கப்பட்ட விதிகளை பின்பற்றி இந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் அனைத்தும் நடத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க ஒரு குழுவை அமைக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் கால்நடை, போலீஸ், சுகாதாரம் மற்றும் வருவாய் துறை ஆகியோர் கொண்ட குழுவை உருவாக்க வேண்டும். இதனை அடுத்து போட்டிகள் நடைபெறும்போதும் அனைத்து நிகழ்வுகளும் வீடியோ மூலமாக படம் பிடிக்கப்பட வேண்டும்.
கால்நடை மருத்துவர் கொண்டு போட்டி தொடங்குவதற்கு முன்பாக காளைகளுக்கு போதைப்பொருள் அல்லது எரிச்சலூட்டும் ஏதாவது பொருள் வழங்கப்பட்டுள்ளதா? என்பதையும் கால்நடைகளின் உடல் நிலை எவ்வாறு இருக்கிறது? என்பதையும் பரிசோதிக்க வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டி திறந்த மைதானங்களில் தான் நடத்தப்பட வேண்டும். மேலும் ஜல்லிக்கட்டு போட்டியின் போது காளைகளுடன் இரண்டு பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அவர்களுக்கும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். இதில் அதிகபட்சமாக 300 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றார்கள். அதேபோல் பார்வையாளர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். மேலும் மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி பெற படாதவர்கள் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதி இல்லை என கூறப்பட்டுள்ளது.