
பாமக சார்பில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பாமக இளைஞரணி தலைவராக பரசுராமன் முகுந்தனை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் புத்தாண்டு அன்று அறிவித்தார். இதனால் கட்சித் தலைவர் அன்புமணிக்கும், ராமதாஸிற்கும் இடையே மேடையிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து டாக்டர் ராமதாஸ் பாமக தலைவராக நானே செயல்படுவேன் என தெரிவித்தார். அதனை அடுத்து கடந்த 11ஆம் தேதி மாமல்லபுரம் அருகே சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெற்ற போது கட்சி நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்களை நேர்மையாகவும், உண்மையாகவும் நடக்கவில்லை எனில் பதவியில் இருந்து விலக்கப்படுவர் எனவும் கடுமையாக எச்சரித்திருந்தார்.
இது போன்ற பரபரப்பான சூழ்நிலையில் தைலாபுரம் தோட்டத்தில் பாமக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆனால் அதில் அன்புமணி மற்றும் பெரும்பாலான செயலாளர்கள், தலைவர்கள் கலந்து கொள்ளவில்லை. இதனைத் தொடர்ந்து நடந்த இரண்டாவது,3ஆவது பாமக ஆலோசனைக் கூட்டத்திலும் பெரும்பாலான தலைவர்கள் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பாமக கௌரவ தலைவர் ஜி.கே. மணி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, டாக்டர் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடு விரைவில் தீரும். அதற்காக பாமக முக்கிய நிர்வாகிகள் இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
விரைவில் இருவரும் சமரசமாவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே பாமக சமூக ஊடகப் பேரவை மாநில மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் தைலாபுரம் தோட்டத்தில் வரும் புதன்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது அந்தக் கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கி ஆலோசனை வழங்குகிறார். இதில் அன்புமணி பங்கேற்பாரா என பாமக நிர்வாகிகள், தொண்டர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இருவரும் ஒன்று சேர வேண்டும் என விருப்பப்படுகின்றனர்.