ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ‘கூலி’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியானது. சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அமிர்கான், சத்யராஜ், நாகார்ஜூனா, ஸ்ருதிஹாசன், உபேந்திரா, சவுபின் ஷாயிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

‘ஏ’ சென்சார் சான்றிதழ் பெற்றுள்ள இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு ஆகஸ்ட் 8ஆம் தேதி தொடங்கியவுடன், சில மணி நேரங்களிலேயே பெரும்பாலான திரையரங்குகளில் விற்றுத் தீர்ந்தது. அடுத்த மூன்று நாட்களுக்கு ஹவுஸ்ஃபுல் நிலை ஏற்பட்டுள்ளது. படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், “இந்த படம் எல்சியுவில் வராது, ரஜினிக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட கதை” என்று வெளியீட்டுக்கு முன் தெரிவித்துள்ளார்.

அண்டை மாநிலமான கேரளாவில் அதிகாலை 6 மணிக்கே ‘கூலி’ சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. குறிப்பாக, பாலக்காட்டில் மட்டும் 10 திரையரங்குகளில் படம் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டு, ரஜினி ரசிகர்கள் மேளதாளம் முழங்க, பட்டாசு வெடித்து, நடனமாடி உற்சாகமாக வரவேற்றனர். இதேபோல், ஆந்திராவின் திருப்பதி, சித்தூரிலும் ‘கூலி’ படம் வெளியிடப்பட்டு, அங்கும் ரசிகர்கள் பெரும் ஆரவாரத்துடன் கொண்டாடினர்.