நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே நடைபெற்ற போராட்டத்தின்போது, அமெரிக்க அதிபர் டிரம்பின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, கடந்த 10-ஆம் தேதி வேளாங்கண்ணி அடுத்த அகரஒரத்தூர் கடைத்தெருவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது அமெரிக்க அதிபர் டிரம்பின் உருவ பொம்மையை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்றபோது, எதிர்பாராதவிதமாக வேர்குடி கிளைச் செயலாளர் கல்யாணசுந்தரம் என்பவரது உடலில் தீப்பிடித்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கல்யாணசுந்தரம் உடனடியாக மீட்கப்பட்டு நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காகத் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், உடலில் ஏற்பட்ட ஆழமான தீக்காயங்கள் காரணமாகச் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து வேளாங்கண்ணி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், உயிரிழந்த நிர்வாகியின் குடும்பத்தினருக்கும் கட்சியினருக்கும் சக தோழர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
