பிரதமர் நரேந்திர மோடி ராமநாதபுரம் தொகுதியில் வருகின்ற 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்தியில் ஆளும் பாஜக அரசு 3-வது முறையாக நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. வட மாநிலங்களில் பாஜகவுக்கு இந்தமுறை ஓட்டுகள் குறையும் என கூறப்படுவதால் தென் மாநிலங்களிலும் பாஜக கவனம் செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது பிரதமர் வேட்பாளராக மீண்டும் மோடியே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் போட்டியிடும் கடைசி தேர்தல் இதுவாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஏனெனில் பாஜக அரசு வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றினால் அடுத்த 5 வருடங்கள் முடிவதற்குள் பிரதமர் மோடிக்கு வயது 80 ஆகிவிடும். அதன் பிறகு அவர் தேர்தலில் போட்டியிடுவது கடினம் தான். இதனால் தற்போது எப்படியாவது பிரதமர் ஆகிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் அதற்கான காய்களை நகர்த்தி வருகிறார். இதன் காரணமாக இந்துக்களின் புனித பூமியாக கருதப்படும் காசி மற்றும் ராமேஸ்வரம் ஆகிய இரு இடங்களை பாஜக குறி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் கலந்து கொண்டு பேசினார். அப்போது ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாகவும், இதுகுறித்து தமிழக பாஜக கோரிக்கை விடுத்துள்ளதாகவும்  தெரிவித்தார். மேலும் ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுவதாக சமீப  காலமாகவே தகவல் வெளிவந்த நிலையில் தற்போது பாஜக தரப்பிலிருந்து அந்த தகவல் வந்துள்ளதால் ஒருவேளை அது உண்மையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.