விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவிலில் வருகிற 2-ந்தேதி புரட்டாசி மகாளய அமாவாசை விழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பக்தர்களின் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷ நாட்களில் பக்தர்கள் கோவிலுக்கு வர அனுமதிக்கப்படுவது வழக்கம். ஆடி, தை மற்றும் புரட்டாசி மாதங்களில் மகாளய அமாவாசை அன்று அதிகமான பக்தர்கள் வருவார்கள். இந்த ஆண்டு புரட்டாசி மகாளய அமாவாசை அன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தாணிப்பாறை மற்றும் கோவில் பகுதிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

பக்தர்களின் வசதிக்காக திருமங்கலம், மதுரை, விருதுநகர், வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். இரவில் தங்குவதற்கும், ஓடைகளில் குளிப்பதற்கும் அனுமதி இல்லை. பாலித்தீன், மது, போதைப்பொருட்கள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

வருகிற 30-ந்தேதி பிரதோஷத்தை முன்னிட்டு மற்றும் 2-ந்தேதி அமாவாசை அன்று சுந்தர-சந்தன மகாலிங்கத்துக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளது.