பிரித்தானியாவில் 70 வயது பெண் வெண்டி ஹாட்சன், 48 ஆண்டுகளுக்குப் பிறகு தனது வேலை விண்ணப்பத்திற்கு பதில் பெற்றதால் ஆச்சரியமடைந்துள்ளார். 1976 ஆம் ஆண்டு, மோட்டார் சைக்கிள் சாகச ஓட்டுநராக வேலைக்கு விண்ணப்பித்த ஹாட்சனின் கடிதம், தபால் துறையின் தவறால் நீண்ட காலம் மேஜையின் பின்னால் சிக்கியிருந்தது. பல வருடங்களுக்கு பிறகு, அந்த கடிதம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டு, ஹாட்சனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இத்தனை வருடங்களுக்குப் பிறகு கடிதத்தைப் பெறுவது உண்மையில் அற்புதம் என கூறிய ஹாட்சன், “நான் கடிதம் எழுதிய காலம் எளிதில் நினைவில் இருக்கிறது. தினமும் தபால் பெட்டியைப் பார்த்தேன், ஆனால் பதில் வரவில்லை. மோட்டார் சைக்கிள் சாகச ஓட்டுநராக பணிபுரிவது என் கனவாக இருந்தது, அதனால் பதில் கிடைக்காதது மிகவும் ஏமாற்றமாக இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.

இதில் சுவாரஸ்யமானது, தபால் துறை எப்படி அவரது தற்போதைய முகவரியைக் கண்டறிந்தது என்பது புதிராகவே உள்ளது. 48 ஆண்டுகளில் ஹாட்சன் பல முறை வீடுகளை மாற்றியிருந்தாலும், கடிதம் அவரை வந்தடைந்தது குறிப்பிடத்தக்கது.