டெல்லியில் நியூஸ் கிளிக் ஊடக நிறுவனத்தில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

டெல்லியில் இருக்கக்கூடிய தனியார் செய்தி நிறுவனத்தினுடைய ஸ்டூடியோ, அவர்களுடைய அலுவலகம் அமைந்திருக்கக்கூடிய பகுதி, அதன் ஊழியர்கள் தங்கி இருக்கக்கூடிய நோய்டா உள்ளிட்ட டெல்லியின் மைய பகுதி ஆகியவற்றில் இந்த சோதனை என்பது அதிகாலையில் இருந்தே நடந்து வருவதாக தகவல்கள் சொல்லப்படுகிறது. 8 பத்திரிகையாளர்கள் உட்பட அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் பலரது வீடுகள் மற்றும் ஸ்டூடியோக்களில் இந்த சோதனை என்பது நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கென்று இருக்கக்கூடிய SP தலைமையிலான குழுக்கள் தனித்தனியாக இந்த சோதனையை நடத்தி வருகிறார்கள். நிறைய பத்திரிகையாளர்களிடமிருந்து அவர்களது லேப்டாப்கள்,  செல்போன்கள் உள்ளிட்டவை எல்லாம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து சட்ட விரோதமாக பணத்தை பெற்றுக்கொண்டு இந்த செய்தி நிறுவனங்கள் செயல்பட்டதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருந்த நிலையில் ஏற்கனவே இந்த நிறுவனத்திற்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ஏற்கனவே விசாரணையும் தொடங்கப்பட்டிருந்தது.

சட்ட விரோத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு என்பது புதிதாக பதிவு செய்யப்பட்டு,  அதன் அடிப்படையில் இன்று சோதனை  நடத்தப்படுகின்றது. இந்த சோதனை கருத்து சுதந்திரம் சார்ந்த விஷயமாக இல்லாமல்,  இந்தியாவின் இறையாண்மை விஷயமாகத்தான்  நடத்தப்படுவதாக டெல்லி காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

இந்திய நாட்டிற்கு எதிராக செயல்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டு அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்படுகிறது. மற்றபடி செய்தி வெளியிட்டது அல்லது கருத்து சுதந்திரம் சார்ந்த விஷயமாக இல்லை என்பதையும் டெல்லி காவல்துறை தெளிவுபடுத்தி இருக்கின்றார்கள். எனவே சட்டவிரோதமாக பணம் பெற்றார்களா ? என்ன காரணத்திற்காக பணத்தைப் பெற்றார்கள் ?

இந்திய இறையாண்மைக்கு எதிராக எந்த மாதிரியான செய்திகள் வெளியிடப்பட்டது ? அது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது ? யார் சொல்லி இந்த செய்தி எல்லாம் வெளியிடப்பட்டது ? செய்திகளை வெளியிடப்பட்டது உண்மைதானா ? போன்ற அனைத்து கோணங்களிலும் இந்த விசாரணை என்பது நடைபெற இருக்கின்றது. இதுவரை கைது நடவடிக்கை எதுவும் நடக்கவில்லை. ஆனால் இந்த சோதனையின் முடிவில் சில கைது நடவடிக்கைகள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.