கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள முதுக்கான பள்ளி பகுதியில் அம்ரிஷ்(43) என்பவர் வசித்து வருகிறார். இவர் வேளாண் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். கடந்த மாதம் 24-ஆம் தேதி செல்போன் மூலம் அம்ரிஷை தொடர்பு கொண்ட ஒருவர் தன்னை வங்கி மேலாளர் என அறிமுகப்படுத்திக் கொண்டார். இதனையடுத்து வங்கி விவரங்களை பூர்த்தி செய்ய கம்ப்யூட்டரில் எனி டெஸ்க் செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு கூறியுள்ளார். அதன்படி அம்ரிஷ் செயலியை பதிவிறக்கம் செய்த பிறகு அந்த நபர் செயலி மூலம் அம்ரிஷின் கம்ப்யூட்டரை பயன்படுத்தினார்.

இதனையடுத்து செல்போனில் பேசிக்கொண்டே வங்கி கணக்கு விவரங்களை வாங்கி அவரின் வங்கி கணக்கில் இருந்து 6,26,000 பணத்தை அந்த நபர் எடுத்துவிட்டார். சிறிது நேரத்தில் சம்பந்தப்பட்ட செல்போன் எண் ஸ்விட்ச் ஆப் என வந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அம்ரிஷ் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபரை வலை வீசி தேடி வருகின்றனர்.