விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்பாதி கிராமத்தில் இருக்கும் தர்மராஜா, திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கடந்த 7- ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் கோவிலுக்குள் தங்களை அனுமதிக்காமல், கோவிலுக்குள் நுழைந்த வாலிபரை தாக்கியதாக கூறி ஒரு தரப்பு மக்கள் சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

இதனையடுத்து கடந்த 8-ஆம் தேதி விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த அமைதி கூட்டத்தில் சுமூக முடிவு எட்டப்படவில்லை. இந்நிலையில் ஒரு தரப்பை சேர்ந்த பொதுமக்கள் தங்களது பிள்ளைகளின் பாதுகாப்பு கருதி அவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த பகுதியில் இருக்கும் கோவில் முன்பு சீருடைகளுடன் 50-க்கும் மாணவ, மாணவிகள் செய்வதறியாது அமர்ந்திருந்தனர்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பெற்றோர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தியபோதும் அவர்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப முன் வரவில்லை. இதனை தொடர்ந்து விழுப்புரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், தாசில்தார் வேல்முருகன் ஆகியோர் தேர்வு நேரத்தில் மாணவர்களின் கல்வி நலன் முக்கியம் என பெற்றோர்களுக்கு எடுத்து கூறி உரிய பாதுகாப்பு வசதிகள் செய்யப்படும் என உறுதி அளித்தனர்.

அதன் பிறகு பெற்றோர் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப சம்மதித்தனர். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் மாணவர்கள் பள்ளிக்கு சென்று வந்தனர். இந்த பிரச்சனை தொடர்பாக சுமூகமாக இருதரப்பினரும் தங்களது கருத்துக்களை தெரிவிக்கும்படி கோட்டாட்சியர் அறிவுறுத்தியுள்ளார். அதன் பிறகு இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.