தென்காசி மாவட்டத்தில் உள்ள அருணாச்சலபுரத்தில் விவசாயியான கனகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் நெல், கத்திரிக்காய் போன்ற பயிர்களை சாகுபடி செய்துள்ளார். இந்நிலையில் வன விலங்குகளிடமிருந்து பயிர்களை பாதுகாப்பதற்காக கனகராஜ் மின்வேலி அமைத்திருந்ததாக தெரிகிறது. இவர் இரவு நேரத்தில் மின் இணைப்பை கொடுத்துவிட்டு காலையில் மின் இணைப்பை துண்டிப்பது வழக்கம்.

நேற்று காலை மின் இணைப்பை துண்டிப்பதற்காக சென்ற கனகராஜ் எதிர்பாராதவிதமாக வரப்பில் நடந்து சென்ற போது வழுக்கி மின்வேலியில் விழுந்து மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். அவரை காப்பாற்றுவதற்காக ஓடிய மற்றொரு விவசாயியான முத்துராஜ் எதிர்பாராதவிதமாக மின்வேலியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கனகராஜை மீட்டு ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த முத்துராஜனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.