கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் தர்கா பகுதியை சேர்ந்த கணேஷ் என்பவர் பெங்களூரில் இருக்கும் ஐ.டி நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 23-ஆம் தேதி கணேஷின் செல்போன் வாட்ஸ் அப் எண்ணிற்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் உங்கள் வங்கி கணக்கில் வாடிக்கையாளர் விவரங்களை முழுவதுமாக பூர்த்தி செய்யவில்லை. உடனடியாக அதனை பூர்த்தி செய்யுங்கள் என கூறி ஒரு லிங்க் இருந்தது.

அதனை நம்பி லிங்கில் அனுப்பிய விண்ணப்பத்தில் தனது வங்கி கணக்கு விவரங்களை கணேஷ் பதிவிட்ட சிறிது நேரத்தில் வங்கி கணக்கிற்கு 25 லட்ச ரூபாய் வந்துள்ளது. அதனை கணேஷ் கவனிக்கவில்லை. பின்னர் 3 தவணைகளாக அவரது வங்கி கணக்கில் இருந்து 13 லட்சத்து 99 ஆயிரத்து 500 ரூபாய் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கணேஷ் வங்கியை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அப்போது நீங்கள் இன்ஸ்டன்ட் லோன் கேட்டு விண்ணப்பித்ததால் உங்கள் சம்பளத்தின் அடிப்படையில் 25 லட்ச ரூபாய் கடனாக பெற்றுள்ளீர்கள் என கூறியுள்ளனர். இதனால் கணேஷ் வங்கிக்கு சென்று நடந்த விபரங்களை தெரிவித்துள்ளார். மேலும் மோசடி குறித்து கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை கொண்டு வருகின்றனர்.