சேலம் மாவட்டத்தில் உள்ள தியாகனூர் கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த செல்லமுத்து என்பவர் அறிமுகமானார். இந்நிலையில் ஆறுமுகம் தனது மகன் மருதமுத்துவுக்கு அரசு வேலை வாங்கி தருவதற்காக செல்லமுத்துவிடம் 20 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். ஆனால் கூறியபடி செல்லமுத்து வேலை வாங்கி கொடுக்கவில்லை. பணத்தையும் திரும்ப தரவில்லை. இதனால் கோபமடைந்த மருதமுத்து கெங்கவல்லியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி கருப்பையாவிடம் பணத்தை வசூல் செய்து தருமாறு தெரிவித்தார்.

அவர் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ஒருவரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதனையடுத்து மருதமுத்து, கருப்பையா உள்ளிட்ட 6 பேர் செல்லமுத்துவை காரில் கடத்தி சென்றனர். பின்னர் தியாகனூர் புதூர் பகுதியில் வைத்து செல்லமுத்துவை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதனால் காயமடைந்த செல்லமுத்து ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மருதமுத்துவை கைது செய்தனர். மற்ற நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.