தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால குடியிருப்பு பகுதியில் குடிநீர் வடிகால் வாரிய திட்ட பிரிவு கண்காணிப்பாளராக சீனிவாசன் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பராமரிப்பு மற்றும் திட்ட பிரிவு அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்த ராமசுப்பிரமணியன் என்பவருக்கு வந்த அரியர் தொகை 3 லட்சத்து 93 ஆயிரத்து 700 ரூபாய் பணத்தை வழங்குவதற்கு சீனிவாசன் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

இதுகுறித்து ராமசுப்பிரமணியன் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி ராமசுப்பிரமணியன் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை சீனிவாசனிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சீனிவாசனை கையும், களவுமாக கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.