
திருச்சி மாவட்டத்தில் உள்ள மண்ணச்சநல்லூர் பகுதியில் இருக்கும் பிரபல ஹோட்டலுக்கு உணவு பாதுகாப்பு அதிகாரி எனக் கூறி ஒருவர் வந்தார். அவர் அங்கிருந்த ஆவணங்களை சரிபார்த்தார். இதனையடுத்து பல குறைகள் இருப்பதாக கூறி 1 லட்ச ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும் என தெரிவித்தார். அப்போது ஹோட்டல் உரிமையாளர் அங்கு இல்லாததால் அவரது செல்போன் எண்ணை வாங்கி அவரை தொடர்பு கொண்டு அந்த நபர் பேசினார்.
அப்போது அபராதம் விதிக்கக்கூடாது என்றால் நான் சொல்லும் செல்போன் எண்ணுக்கு பத்தாயிரம் ரூபாய் பணத்தை அனுப்ப வேண்டும் எனக் கூறினார். அதற்கு ஹோட்டல் உரிமையாளர் வெங்கடேஷ் நான் வீட்டில் இருக்கிறேன். கடைக்கு வந்து தருகிறேன் என கூறினார். இதற்கிடையே வெங்கடேஷ் உணவு பாதுகாப்பு அதிகாரியாக வந்த நபர் குறித்து விசாரித்த போது அவர் அதிகாரி இல்லை என்பது தெரியவந்தது. இதுகுறித்து வெங்கடேஷ் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்படி போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்ததில் அவர் திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த திருமுருகன் என்பதும், அவர் சென்னை கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் வேலை பார்த்து வந்த நிலையில் நிர்வாக காரணங்களுக்காக கடந்த 2018-ஆம் ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்டு தற்போது மண்ணச்சநல்லூர் தனியார் ஐஏஎஸ் அகாடமியில் வேலை பார்த்து வருவது தெரியவந்தது. அவர் மீது ஏற்கனவே ஏழு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. அதிகாரி போல நடித்து பணத்தை பறிக்க முயன்ற திருமுருகனை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.