சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, முக்கியமான வி.ஐ.பி பாதுகாப்பு பணியில் இருக்கும் போது காவலர்கள் செல்போன் உபயோகிக்க கூடாது. சாலைகளில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் போதும் விதிமுறைகளை மீறுபவர்களை கண்காணிக்கும் போதும் செல்போன் உபயோகப்படுத்த அனுமதி இல்லை. முக்கிய சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு பணி, கோவில் திருவிழாக்கள், முக்கியமான போராட்டங்களின் போதும் பணியில் இருக்கும் போலீசார் செல்போன் உபயோகப்படுத்தக் கூடாது.

உயர் அதிகாரிகள் மேற்கூறிய தகவல்களை தங்களுக்கு கீழ் வேலை பார்க்கும் போலீசாருக்கு அறிவுரையாக வழங்க வேண்டும். அனைத்து காவல் நிலைய தகவல் பலகைகளில் இது போன்ற தகவல்களை எழுதி வைக்க வேண்டும். காலை நேரம் அணிவகுப்பு நடத்தும்போது தினமும் போலீசாருக்கு உயர் அதிகாரிகள் அறிவுரையாக இதனை எடுத்துச் சொல்ல வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.