காதலனை திருமணம் செய்ய தனது ஆறு வயது மகளுடன் போலந்தை சேர்ந்த பெண்மணி இந்தியா வருகை தந்த சம்பவம் பெரும் பேசு பொருளாகியுள்ளது.

கடந்த ஆண்டு 19 வயது பெண் ஒருவர் பாகிஸ்தானிலிருந்து பெங்களூருவைச் சேர்ந்த தனது காதலனை தேடி வந்துள்ளார். லுடோ  விளையாடும் போது நட்பாகி பின் வந்த காதலால் இந்த சம்பவம் அரங்கேறியது. அதேபோல சில நாட்களுக்கு முன்பாக தன்னோடு pubg விளையாடிய காதலனை கரம் பிடிக்க  அத்துமீறி பெண் ஒருவர் இந்தியாவில் நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் காதலுக்கு எல்லைகள் கிடையாது என்பதை நிரூபிக்கும் விதமாக இந்தியாவில் மற்றொரு சம்பவம் நடைபெற்றுள்ளது. அதன்படி, போலாந்து நாட்டைச் சேர்ந்த பார்பரா என்னும் 40 வயது பெண்மணி இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஹசாரிபாக் என்னும் சிறுநகரத்தில் வசித்து வரும் மாலிக் என்னும் இளைஞருடன் 2021ல் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு பின் நட்பாகி, நட்பு நாளடைவில் காதலாக மலர்ந்தது.

பார்பராவுக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தாகியிருந்த நிலையில் மீண்டும் திருமண வாழ்க்கைக்குள் நுழையலாம் என முடிவெடுத்து தனது ஆறு வயது மகளுடன் 2027 வரை அனுமதியில் இருக்கும் டூரிஸ்ட் விசாவில் இந்தியாவிற்கு தனது காதலன் மாலிக்கை  காண வருகை தந்தார் பார்பரா. பின் இருவரும் சந்தித்து திருமணம் செய்ய முடிவெடுத்த நிலையில், ஹசாரிபாக் நீதிமன்றத்தில் திருமணம் செய்ய விண்ணப்பித்துள்ளனர். தற்போது இருவரின் திருமணத்திற்கான வேலைகளும் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன.