பாட்டாளிகள் மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று தைலாபுரத்தில் உள்ள தனது தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இந்த பேட்டியில் பேசிய அவர்,”கட்சியின் தலைவர்கள் போன்ற உயர் பதவியில் இருப்பவர்கள் செய்தியாளர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும். நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு கோபப்படாமல் பதிலளிக்க வேண்டும். இதற்கு உதாரணமாக கலைஞர் கருணாநிதியின் ஆட்சியின் போது திமுகவும் பாமகவும் கூட்டணியில் இருந்தது. அப்போது கலைஞரிடம் செய்தியாளர் ஒருவர் கூட்டணியில் இருந்து கொண்டே டாக்டர் ராமதாஸ் உங்களை குறித்து தினமும் விமர்சிக்கிறாரே? என்ன கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த கலைஞர்”தைலாபுரத்தில் இருந்து எனக்கு தினமும் தைலம் வருகிறது” என நகைச்சுவையாக, மிக நளினமாகவும் பதில் கூறினார். பத்திரிக்கையாளர்களிடம் பதிலளிப்பது குறித்து கலைஞர் கருணாநிதி இடம் கற்றுக்கொள்ள வேண்டும் என ராமதாஸ் கூறினார். பின்னர் அன்புமணி ராமதாசுடன் கருத்து வேறுபாடு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், அன்புமணியுடன் கருத்து வேறுபாடு இருந்தது உண்மைதான். அதன் பிறகு அவரே வந்து பேசினார் எல்லாம் சரியாகிவிட்டது என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து பாமகவின் இளைஞர் அணி தலைவர் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பாமக மாநில இளைஞர் அணி தலைவர் முகுந்தன் பதவியில் நீடிப்பாரா என்ற கேள்விக்கு இடமில்லை. பொதுக்குழு முடிந்த மறுநாளே அவருக்கு நியமனம் கடிதம் அடித்துக் கொடுக்கப்பட்டு விட்டது. அதில் எந்தவித மாற்றமும் இல்லை முகுந்தன் தான் இளைஞர் அணி தலைவர். இவ்வாறு பத்திரிக்கையாளர்களுக்கு ராமதாஸ் பதில் அளித்தார்.