மகாராஷ்டிராவில் காங்கிரஸ் முக்கிய தலைவரான பாபா சித்திக் கடந்த அக்டோபர் 12ம் தேதி சுட்டு  கொல்லப்பட்டார். இவரது கொலைக்கு லாரன்ஸ் பிஷ்னோய் ரவுடி கும்பல் தான் காரணம் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். லாரன்ஸ் பிஷ்னோய் தற்போது போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு, சபர்மதி சிறையில் உள்ளார். இவர் சிறையில் இருந்து கொண்டே இதுபோன்ற குற்றச் செயல்களை அரங்கேற்றி வருகிறார்.

இவரது சகோதரரான அன்மோல் பிஷ்னோய், பல்வேறு குற்ற செயல்களை செய்து என்.ஐ.ஏ வால் தேடப்பட்டு வருகிறார். அன்மோல் பிஷனோய் குறித்த தகவலை தெரிவித்தால் ரூ.10 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என்று என்.ஐ.ஏ அறிவித்துள்ளது. இவர் மீது என்.ஐ.ஏ கடந்த 2022ம் ஆண்டு 2 குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது. இந்நிலையில் தற்போது பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டிற்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக அன்மோல் தேடப்பட்டு வருகிறார்.