ஐ.நாவின் அதிகாரிகள் தலீபான்களின் கொடிக்கு முன்பு நின்று புகைப்படம் எடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியதால் மன்னிப்பு கோரியுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டை ஒன்றரை வருடங்களாக ஆண்டு வரும் தலிபான்கள், பெண்களுக்கு  பல தடைகளை அறிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் ஐ.நா, தலீபான்களை கண்டித்து வருகிறது. மேலும், பெண்களுக்கு எதிராக நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளையும் நீக்க வலியுறுத்திக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், இது பற்றி பேச்சுவார்த்தை மேற்கொள்ள ஐ.நா துணை பொதுச்செயலாளர் அமீனா அகமது, தலைமையிலான குழுவினர் நான்கு நாட்கள் பயணமாக ஆப்கானிஸ்தான் சென்றார்கள். அங்கு, காந்தஹார் நகரத்தில் தலீபான்களை நேரடியாக சந்தித்த அவர்கள், பெண்களுக்கான கல்வி போன்ற உரிமைகள் பறிக்கப்பட்டால் நேரும் அபாயங்கள் குறித்து விளக்கினார்கள்.

அதன் பிறகு, சில அதிகாரிகள் தலீப்பான்களின் கொடிக்கு முன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். அதனை, அவர்கள் தங்களின் இணையதள பக்கத்தில் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளரின் துணை செய்தி தொடர்பாளராக இருக்கும் பர்ஹான் ஹக் தெரிவித்ததாவது, அந்த புகைப்படத்தை எடுத்திருக்க கூடாது. கவனக்குறைவுடன் அதிகாரிகள் செயல்பட்டது வெளிப்படையாக தெரிகிறது. இது தவறு, இதற்காக மன்னிப்பு கேட்கிறோம் என்று கூறியிருக்கிறார்.