கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களின் போக்குவரத்து வசதியை மேம்படுத்துவதற்காக சபரிமலை அருகே புதிய விமான நிலையம் அமைக்கப்பட இருக்கிறது. இந்த விமான நிலையம் தொடர்பாக நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது கேரள மாநில எம்பி ஆன்டோ ஆன்றனி கேள்வி எழுப்பினார். இதற்கு விமான போக்குவரத்து துறை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா பதில் அளித்தார். அவர் கூறியதாவது, எருமேலி அருகே விமான நிலையம் அமைப்பதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளது.

இங்கு விமான நிலையம் அமைக்க மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் அனுமதி பெறப்பட்டுள்ளது. புதிய விமான நிலையம் அமைத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து மத்திய தொழில் வளர்ச்சிக் கழகம் ஆய்வு செய்து வரும் நிலையில், தற்போது சுற்றுச்சூழல் அனுமதிக்காக காத்திருக்கிறோம் என்று கூறினார். மேலும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய இணைமந்திரி வி.கே சிங் சபரிமலையில் விமான நிலையம் அமைப்பதற்கு 2300 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அதன் மதிப்பு சுமார் 4000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்