விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் இருக்கும் சதுரகிரி சுந்தர சந்தன மகாலிங்கம் கோவிலுக்கு மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு நேற்று பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். நேற்று காலை 6 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்தனர். இதனையடுத்து மழை பெய்ய ஆரம்பித்ததால் பக்தர்கள் அவசர அவசரமாக கீழே இறங்கிவிட்டனர். இந்நிலையில் மழை விடாமல் பெய்ததால் எலும்போடை, சங்கிலி பாறை, பிளாவடி கருப்பசாமி பகுதியில் இருக்கும் ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.

இதுகுறித்து அறிந்த வனத்துறையினரும் தீயணைப்பு பெயர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மலை பாதையில் சிக்கி இருந்த பக்தர்களை மீட்க முயன்றனர். ஆனால் காற்றாற்று வெள்ளம் அதிகரித்ததால் பக்தர்கள் கோவிலிலேயே தங்க வைக்கப்பட்டனர். இன்று காலை வரை கோவிலிலேயே பக்தர்கள் தவித்தனர். இந்நிலையில் மாங்கனி ஓடை அருகே சிக்கி இருந்த பெண்கள் உட்பட 20-க்கும் மேற்பட்டோரை இன்று காலை வனத்துறையினரும், தீயணைப்பு வீரர்களும் பத்திரமாக மீட்டனர். சதுரகிரி மலையில் இருக்கும் பக்தர்கள் கீழே இறங்க அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.