ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மகாணிப்பட்டு ஊராட்சியில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக தனியாருக்கு சொந்தமான லுங்கி தயாரிக்கும் நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தின் பின்புறம் காவேரிப்பாக்கம் ஏரி கால்வாயிலிருந்து கங்காதரநல்லூர் ஏரிக்கு செல்லும் கால்வாய் இருக்கிறது. இந்த ஏரி மூலம் கங்காதரநல்லூர், புதூர், பிள்ளையார் குப்பம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 300 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுகிறது.

நேற்று முன்தினம் ஏரியில் மீன்கள் செத்து மிதந்ததை பார்த்த பொதுமக்கள் தனியார் நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் ஏரியில் கலப்பதால் தான் மீன்கள் இறந்து கிடப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் திடீரென அந்த கம்பெனி நுழைவு வாயிலில் செத்துப்போன மீன்களை கொட்டி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன் பிறகு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.