சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஒன்பதாவது வார்டு பகுதியில் திருத்தளிநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இருக்கும் குளத்தின் பிரதான பகுதி முன்னோர்களுக்கு வழிபாடு நடத்தும் மண்டக படித்துறையாக பயன்படுத்தப்படுகிறது. அதற்கு அருகே பல வருடங்களாக பேரூராட்சியின் கட்டுப்பாட்டில் நேரத்தை அறிவிக்கும் சங்கொலி நிலையம் இயங்கி வந்தது.

இந்நிலையில் அந்த கட்டடம் இடிந்து பாழடைந்து குடிநீர் தொட்டியில் இருந்து வெளியேறும் உபரி நீர் அந்த பகுதியில் தேங்கி கிடக்கிறது. மேலும் கழிவு நீர் சேர்ந்து துர்நாற்றம் வீசுவதால் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டது. எனவே குப்பைகளை அகற்றி அந்த இடத்தை தூய்மையாக வைக்க வேண்டும் என பேரூராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.