வடகொரியாவில் அவ்வபோது வித்தியாசமான விதிமுறைகள் அறிவுறுத்தப்படும். வடகொரியா ஒரு சர்வாதிகார ஆட்சியின் கீழ் செயல்படுகிறது. இங்கு புதிய சட்டங்கள் மற்றும் கடுமையான தண்டனைகள் என மக்கள் அரசுக்கு பயந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் ஹாட் டாக் (hotdog) உணவு வகைகளை உண்பது மற்றும் விற்பனை செய்வது தேச துரோகம் என அந்நாட்டு  அரசு விதிமுறை கொண்டு வந்துள்ளதாக செய்திகள் வெளியாகின்றன.

இந்த செய்தி எதுவும் வடகொரியாவில் இருந்து வெளிவரவில்லை. பொதுவாக வடகொரியா அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் கலாச்சாரத்தை பின்பற்றுவதில்லை. அதனை அந்நாட்டு அதிபரும் விரும்புவதில்லை. இதன் அடிப்படையில் தான் ஹாட் டாக் உணவு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. ஹாட் டாக் பொதுவாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகளில் சாப்பிடப்படும் உணவுப் பொருளாகும்.

ஹாட் டாக் என்பது ரொட்டி துண்டுகளில் வறுத்த அல்லது வேக வைத்த இறைச்சிகளை வைத்து விற்பனை செய்யப்படும் உணவுகள் ஆகும். இந்த ஹாட் டாக் உணவுகளை வடகொரியாவில் தயாரித்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என உத்தரவு பிறப்பித்துள்ளதாக தென் கொரிய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.