பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடா, வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் காலமானார். ரத்தன் டாடாவின் மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது மறைவு இந்திய தொழில் உலகில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பேடிஎம் நிறுவனத்தின் தலைமை அதிகாரி விஜய் சேகர் சர்மா, ரத்தன் டாடா மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் எக்ஸ் (முந்தைய ட்விட்டர்) வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், “அடுத்த தலைமுறையின் தொழில் முனைவோர், இந்தியாவின் மிகவும் எளிமையான தொழிலதிபருடன் தொடர்பு கொள்வதைத் தவறவிடுவார்கள். வணக்கங்கள், ஐயா. ஓகே, டாடா பை பை” என்று அவர் பதிவிட்டிருந்தார்.

இந்த பதிவு நெட்டிசன்களின் கடும் விமர்சனத்தைச் சந்தித்தது. சிலர், இதுபோன்ற ஒரு சோகமான தருணத்தில் இப்படி பொருத்தமற்ற முறையில் பதிவிடுவது தவறு என கண்டனம் தெரிவித்தனர். மேலும், ஒரு நெட்டிசன் “செய்திகளில் இருப்பதற்கான வாய்ப்பை ஒருபோதும் தவறவிடாதீர்கள்” எனச் சாடினார். இப்படி பலரும் விஜய் சேகர் சர்மாவின் பதிவை கண்டித்தனர். இந்த கண்டனங்கள் மற்றும் விமர்சனங்களுக்குப் பிறகு, பேடிஎம் சிஇஓ விஜய் சேகர் சர்மா தனது சர்ச்சைக்குரிய பதிவை உடனடியாக நீக்கினார்.