ஒரே பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் அளிக்க கோரிய  வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசனம் அமர்வு இன்று தீர்ப்பளிக்க உள்ளது. இந்த விவகாரம் தொடர்பான மனுக்களை உச்சநீதிமன்றம் கடந்த ஏப்ரல் 18ம் தேதியிலிருந்து தொடர்ச்சியாக பத்து நாட்கள் விசாரித்தது. விசாரணையின் போது ஒரே பாலின திருமணத்திற்கு நீதிமன்ற சட்ட அங்கீகாரம் அளிக்க முற்படும் நடவடிக்கை என்பது தற்போதைய சூழலுக்கு சரியானதாக இருக்காது என்றும்,  அதனால் ஏற்படும் விளைவுகளை நீதிமன்றம் தொடர்ந்து கண்காணிக்க முடியாது எனவும் மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த விவகாரத்தில் ராஜஸ்தான், ஆந்திரா, அசாம் ஆகிய மாநிலங்கள்  எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து கடந்த மே 13ஆம் தேதி இந்த வழக்கின் தீர்ப்பை நீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்நிலையில் ஒரே பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் அளிக்க கூடிய வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகளை கொண்ட சாசனம் இன்று தீர்ப்பளித்தது.  சந்திர சுட,  சஞ்சய் கிஷன் கவுல், ரவீந்திர பட்,  நரசிம்மா ஆகியோர் நாலு விதமான தீர்ப்புகளை வழங்கியுள்ளனர்.

நீதிமன்றத்தால் ஒரு சட்டத்தை உருவாக்க முடியாது. ஆனால் சட்டத்தின் சரத்துகளை கையாள முடியும் என தலைமை நீதிபதி கூறி இருக்கின்றார் . 200 ஆண்டுகளுக்கு முன்னர் முன்னோர்களால் ஏற்கப்படாத விஷயங்கள் இன்று ஏற்கப்பட்டுள்ளன. தன் பாலின உறவு என்பது நகர்ப்புறத்தை சேர்ந்தது என்ற கருத்து ஏற்புடையது அல்ல. சதி, குழந்தை திருமணங்கள் போன்ற முன்பு ஏற்கப்பட்ட விஷயங்கள் இன்று மறுக்கப்படுகின்றன.

திருமணம் தொடர்பான விவகாரத்தில் புதிய சட்டத்தை உருவாக்க நாடாளுமன்றத்தையோ,  சட்டமன்றத்தையோ கட்டாயப்படுத்த முடியாது. சிறப்பு திருமண சட்டத்தை அரசியல் சாசனத்திற்கு எதிராக கருதினால் ஒரு முற்போக்கான சட்டத்தை இலக்க நேரிடும் என நீதிபதிகள் இந்த வழக்கில் கூறியிருக்கிறார்கள்.

மேலும் திருமண சிறப்பு சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டுமா ? என்பதை நாடாளுமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும். திருமணம் என்பது நிலையானது, மாறாதது என சொல்வது தவறான விஷயம். சிறப்பு திருமண சட்டத்தை ரத்து செய்வது தேசத்தை சுதந்திரத்திற்கு முந்தைய காலத்திற்கு கொண்டு சென்று விடும். அரசியல் சாசன பிரிவு 21 இன் கீழ் சுதந்திரமாக வாழும் உரிமை வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் உரிமை அனைவருக்கும் உள்ளது  நீதிபதிகள் தெரிவித்துள்ளார்கள்.