
ஆசியக் கோப்பை சூப்பர் ஃபோர் சுற்றின் 5வது ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியதன் மூலம் இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் நேற்று தொங்கி நடைபெற்றது. மழை குறுக்கிட்ட இப்போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 42 ஓவர்களில் 252 ரன்கள் எடுத்தது. டக்வொர்த் லூயிஸ் விதியின் கீழ் இலங்கைக்கு 252 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் ஆட்டமிழக்காமல் 86 ரன்கள் எடுத்தார். அப்துல்லா ஷபிக் 52 ரன்கள் எடுத்தார். இப்திகார் 47 ரன்கள் சேர்த்தார். அவர் ரிஸ்வானுடன் ஒரு செஞ்சுரி பார்ட்னர்ஷிப்பைப் பகிர்ந்து, இந்தப் போட்டியில் பாகிஸ்தானுக்காக வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மேலும் பாபர் அசாம் 29 ரன்கள் எடுத்தார். இலங்கை அணியில் பத்திரன 3 விக்கெட்டுக்களையும், மதுஷன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். திக்ஷனா மற்றும் வெல்லலகே தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
பரபரப்பான நேரத்தில் கடைசி பந்தில் 8 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி வெற்றி இலக்கை எட்டியது. அதே நேரத்தில், 13வது முறையாக ஆசிய கோப்பையின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது இலங்கை அணி.
253 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 20 ரன்கள் எடுத்த நிலையில் முதல் அடியை சந்தித்தது. குசல் பெரேரா 8 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஷதாப் கானின் சரியான த்ரோ மூலம் ரன் அவுட் ஆகி பெவிலியனுக்கு அனுப்பப்பட்டார். அதன் பிறகு அந்த அணி 77 ரன்களில் மற்றொரு அதிர்ச்சியை சந்தித்தது. பதும் நிசங்க 44 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஷதாப் கான் அவரது பந்தில் அவரே கேட்ச் செய்து நிசாங்காவை அவுட் செய்தார்.

குசல் மெண்டிஸின் சதம் வெறும் ஒன்பது ரன்களில் தவறிவிட்டது :
இதையடுத்து 177 ரன்களில் இலங்கை அணியின் 3வது விக்கெட் சரிந்தது. சிறப்பாக ஆடிய சதீர சமர்விக்ரம 51 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இப்திகார் அகமது பந்துவீச்சில் முகமது ரிஸ்வானால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார் சமர்விக்ரம. அவர் குசல் மெண்டிஸுடன் ஒரு சத பார்ட்னர்ஷிப்பை பகிர்ந்து கொண்டார். பின் 210 ரன்களில் இலங்கையின் 4வது விக்கெட் சரிந்தது. குசல் மெண்டிஸ் 87 பந்துகளில் (8 பவுண்டரிகள், ஒரு சிக்சர்) 91 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இப்திகார் அகமது பவுலிங்கில் முகமது ஹாரிஸ் அருமையான கேட்ச் எடுத்து அவரை வெளியேற்றினார். இலங்கை 222 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இலங்கையின் 5வது விக்கெட் சரிந்தது. கேப்டன் தசுன் ஷனக 4 பந்துகளில் 2 ரன்களை எடுத்த நிலையில் இப்திகார் அகமது பவுலிங்கில் முகமது நவாஸிடம் கேட்ச்கொடுத்து அவுட் ஆனார். 37.4 ஓவரில் இலங்கை அணி 222 ரன்களுக்கு 5விக்கெட் இழந்தது.
இலங்கை அணி வெற்றிக்கு 26 பந்துகளில் 30 ரன்கள் தேவைப்பட்டது. ஒரு புறம் அசலங்கா நிலைத்து நின்றிருந்தார். கடைசி 2 ஓவரில் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட 41வது ஓவரில் ஷாஹின் அப்ரிடி 4 ரன்கள் மட்டுமே கொடுத்து தனஞ்செய டி சில்வா (5) மற்றும் துனித் வெல்லலகே(0) ஆகியோரை அடுத்தடுத்து அவுட் செய்தார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இறுதி ஓவரில் 8 ரன்கள் தேவைப்பட ஜமான் கானின் முதல் பந்தில் மதுஷன் காலில் பட்டு லெக் பையில் ஒரு ரன் கிடைக்க, 2வது பந்தை அசலங்கா மிஸ் செய்து, 3வது பந்தில் ஒரு ரன் எடுத்தார்.
கடைசி 3 பந்தில் 6 ரன்கள் தேவைப்பட, 4வது பந்தில் மதுஷன் பேட்டில் படாமல் பின்னால் செல்ல இருவரும் ஓட, மதுஷன் ரன் அவுட் ஆனார். பின் பத்திரனா உள்ளே வந்தார். அசலங்கா ஸ்டரைக்குக்கு வர 2 பந்தில் 6 ரன்கள் தேவை என்பதால் பாகிஸ்தான் கையே ஓங்கியிருந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக 5வது பந்து பேட்டில் பட்டு எட்ஜ் ஆகி பின்னால் கீப்பருக்கும், பீல்டருக்கும் நடுவே சென்று பவுண்டரி ஆனதால் ஆட்டம் இலங்கை பக்கம் திரும்ப, கடைசி பந்தில் அசலங்கா லெக் திசையில் அடித்து 2 ரன்கள் ஓடி எடுக்க இலங்கை த்ரில் வெற்றி பெற்றது. அசலங்கா 49 ரன்களுடன் களத்தில் இருந்தார். பாகிஸ்தான் அணியில் இப்திகார் அகமது 3 மற்றும் ஷாஹின் அப்ரிடி 2 விக்கெட்டுகளையும், ஷதாப் கான் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
இலங்கை அணி 42 ஓவரில் 8 விக்கெட் இழந்து 253 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் செப்டம்பர் 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இந்தியா மற்றும் இலங்கை இடையே இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது. இதனிடையே இன்று சூப்பர் 4ல் இந்தியா மற்றும் வங்கதேசம் மோதவுள்ளது. இந்த போட்டி சம்பிரதாய ஆட்டம் தான். இருப்பினும் வங்கதேசம் வெற்றியுடன்முடிக்க நினைக்கும். அதே நேரத்தில் வங்கதேசத்தையும் வீழ்த்தி வெற்றியுடன் இறுதிப்போட்டிக்கு செல்ல இந்தியா விரும்பும். இன்றைய போட்டியில் சில இந்திய வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்படலாம்.
A nail-biter to decide the second #AsiaCup2023 finalist 😯
Sri Lanka edge Pakistan to set up final clash against India 💪#PAKvSL 📝: https://t.co/09gsWZFGB8 pic.twitter.com/QvUad3XLZn
— ICC (@ICC) September 14, 2023