நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி டி20 மற்றும் ஒரு நாள் தொடர்களில் விளையாடுகிறது. இதில் டி20 போட்டியை 4-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றிய நிலையில் தற்போது ஒரு நாள் தொடர் நடைபெறுகிறது. இதில் ஏற்கனவே நடைபெற்ற இரண்டு போட்டிகளில் நியூசிலாந்து வென்ற நிலையில் இன்று மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்நிலையில் இன்று போட்டியின்போது திடீரென மின்தடை ஏற்பட்ட சம்பவம் ரசிகர்கள் மற்றும் வீரர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது போட்டியின் 39வது ஓவரில் நியூசிலாந்து பேஸர் ஜேக்கப் டஃபி பந்து வீச தயாராக ஓடிச் சென்றபோது, மைதானத்தின் ஒளிவிளக்குகள் திடீரென நின்றன. எதிர்பாராத இந்த சூழ்நிலையில் டஃபி உடனடியாக தன்னுடைய ஓட்டத்தை நிறுத்தியதால்தான் ஒரு அபாயகரமான விபத்து தவிர்க்கப்பட்டது.

 

இந்த திடீர் மின்தடை காரணமாக விளையாட்டு சில நிமிடங்களுக்கு நிறுத்தப்பட்டது. இரவு நேரத்தில் நடைபெறும் போட்டியில் விளக்குகள் அவசியமான நிலையில் இத்தகைய சம்பவம், போட்டியின் போக்கில் ஒரு அதிர்ச்சி தரும் இடையூறாகும். பின்னர் மின்சாரம் மீண்டும் வந்ததும், போட்டி வழக்கம்போல் தொடரப்பட்டது. இந்த சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் விவாத பொருளாக மாறிய நிலையில், கிரிக்கெட் அரங்கில் இத்தகைய மின்தடை எதிர்காலத்தில் மீண்டும் ஏற்படாமல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.