மலையாள சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் சம்யுக்தா தமிழில் களரி, ஜூலை காற்றில் போன்ற படங்களில் நடித்து உள்ளார். அண்மையில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்த “வாத்தி” திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் உலகளவில் ரூ.75 கோடியை வசூலித்து இருப்பதாக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தது.

இந்த நிலையில் நடிகை சம்யுக்தாவை மலையாள தயாரிப்பாளர் சாண்ட்ரா தாமஸ் புகழ்ந்து உள்ளார். சாண்ட்ரா தாமஸ் கூறியதாவது “நான் தயாரித்த எடக்காடு பட்டாலியன் திரைப்படத்தில் நடித்ததற்காக சம்யுக்தாவுக்கு 65% சம்பளத்தை தான் கொடுத்தேன். படம் ரிலீசாகி வரவேற்பை பெறவில்லை. பாக்கி ஊதியத்தை கொடுக்க முயன்ற போது அவர் வாங்க மறுத்து விட்டார்.

முழு ஊதியமும் தரவில்லை எனில் டப்பிங் பேசவும் படத்தின் புரமோஷனுக்கும் வர மறுக்கும் நடிகர்களுக்கு மத்தியில் சம்யுக்தா ஒரு பாடப் புத்தகம் போன்றவர். ஆண்டுக்கு 300 திரைப்படங்களுக்கு மேல் தயாராகும் மலையாள சினிமாவில் 5% படங்கள் மட்டுமே வெற்றி பெறுகிறது. இந்நிலையில் சம்யுக்தா போன்றவர்கள் தயாரிப்பாளர்களுக்கு தேவை என்பதை என் அனுபவத்தில் கூறுகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.