
நாடாளுமன்ற மக்களவையில் தி.மு.க, எம்.பி தயாநிதிமாறன் கேள்வி நேரத்தில் ஆன்லைன் கேமிங் தடை குறித்த கேள்வியை எழுப்பினார். இதில் அவர் கூறியதாவது, “ஆன்லைன் விளையாட்டுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கும் பொறுப்பில் இருந்து மத்திய அரசு விலகி உள்ளதா?, அதனை தமிழக அரசு தடை செய்துள்ளது. அனைத்து ஆன்லைன் விளையாட்டு தளங்களையும் தடை செய்வதற்கு மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் எவ்வளவு காலம் தான் எடுத்துக் கொள்ளும்?”என கேள்வி எழுப்பினார்.
இதற்கு மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்துள்ளார். இதில் அவர் கூறியதாவது, “மத்திய அரசுக்கு கட்டளை இடும் உரிமை மாறனுக்கு கிடையாது. அரசியல் சாசனம் எவ்வாறு வரையறுக்கப்பட்டுள்ளதோ அதன்படியே நாடு இயங்கி வருகிறது. அதனால் தயவு செய்து மாறன் மத்திய கட்டமைப்பு பற்றி படித்து தெரிந்து கொள்ளவும். நாட்டின் மத்திய கட்டமைப்பை மதிக்கும் படியும் அரசியல் அமைப்பை பாதுகாக்கும் படியும் உறுப்பினரை கேட்டுக்கொள்கிறேன்.
இதுவரை மத்திய அரசு 1,410 ஆன்லைன் விளையாட்டு தளங்களை தடை செய்துள்ளது. மத்திய அரசு ஆன்லைன் விளையாட்டுக்கு எதிராக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் பந்தயம், சூதாட்டம் ஆகியன குறித்த சட்டங்கள் அந்தந்த மாநிலங்களுக்குரிய விஷயமாகும். புதிய குற்றவியல் சட்டம் 112 ஆம் பிரிவை பயன்படுத்தி அந்தந்த மாநிலங்கள் அதற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்” என பதிலளித்தார்.