திருவாரூர் மாவட்டத்தில் உள்ள புலிவலம் பகுதியில் உத்ராபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இன்ஜினியரிங் பட்டதாரியான மணிகண்டன் என்ற மகன் உள்ளார். வேலை கிடைக்காததால் மணிகண்டன் தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்ல முயற்சி செய்து வந்த மணிகண்டன் சமூக வலைதளங்களில் செல்போன் எண்ணை பதிவிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ் அப்பில் மர்ம நபர் ஒருவர் மணிகண்டனுக்கு குறுந்தகவல் அனுப்பினார். அதில் தான் வெளிநாட்டிற்கு வேலைக்கு ஆட்கள் அனுப்பும் நிறுவனம் நடத்தி வருவதாக தெரிவித்தார். அப்போது தன்னை வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்குமாறு மணிகண்டன் கூறினார். அதற்கு அந்த நபர் வேலைக்கு அனுப்புவதாக உறுதி அளித்தார். இதனையடுத்து டிக்கெட், விசா ஆகியவற்றிற்கு முன்பணமாக மணிகண்டனிடம் இருந்து மர்ம நபர் 13,500 ரூபாய் பணத்தை வாங்கினார்.

ஆனால் கூறியபடி வேலைக்கு அனுப்பி வைக்கவில்லை. இதனையடுத்து மணிகண்டன் அந்த நபரை தொடர்புகொள்ள முயற்சித்த போது ஸ்விட்ச் ஆப் என வந்தது. இதுகுறித்து மணிகண்டன் திருவாரூர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் மோசடியில் ஈடுபட்டது புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் என்பது தெரியவந்தது. இதனால் கார்த்திக்கை போலீசார் கைது செய்தனர்.