திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்நிலையில் நம்பிதலைவன்பட்டயம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ஆறுமுகம்(80) தனது மனைவி சத்தியவாணி, மகன் செல்வன் ஆகியோருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து அவர் உடல் முழுவதும் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்ததும் போலீசார் தடுத்து நிறுத்தி அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது ஆறுமுகம் கூறியதாவது, கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு எங்கள் பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் 20 ஆயிரம் ரூபாயை கடனாக வாங்கினோம்.

அதற்கு வாரம் தோறும் 2000 ரூபாய் வட்டி பணமாக கொடுத்தோம். வாரம் 2000 ரூபாய் வட்டி கொடுப்பதால் அசலை செலுத்த இயலவில்லை. கடந்த 4 மாதங்களாக நாங்கள் வட்டி பணம் கொடுக்கவில்லை. இதனால் அந்த நபர் வீட்டிற்கு வந்து கந்து வட்டி கேட்டு தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுகிறார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் மன உளைச்சலில் தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்துள்ளார். அவரை போலீசார் சமாதானப்படுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வைத்தனர்.