திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டியில் விவசாயியான ஆட்சிமுத்து(78) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 4 மகன்களும், 3 மகள்களும் இருக்கின்றனர். சமீபத்தில் ஆச்சி முத்துவின் மூன்றாவது மகன் காட்டு ராஜாவின் மகளுக்கு திருமணம் நடைபெற்றது. அந்த திருமண அழைப்பிதழில் சில உறவினர்களின் பெயரை அச்சிடவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆச்சிமுத்துவின் மூத்த மகன் வழி பேரன் மருதை மற்றும் அவரது குடும்பத்தினர் கோபத்தில் இருந்தனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த ஆச்சிமுத்துவை மருதை எழுப்பி தகராறு செய்தார். பின்னர் வாக்குவாதம் முற்றிய நிலையில் மருதை தனது தாத்தாவை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து அறிந்த போலீசார் ஆச்சிமுத்துவின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் மருதை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது மருதை கூறியதாவது, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக எனது தாத்தா ஆச்சிமுத்து எங்கள் குடும்பத்தினரை ஒதுக்கி வைத்தார்.

திருமண அழைப்பிதழில் எனது தந்தை பெயர் இடம் பெறவில்லை. எங்களுக்கு அழைப்பிதழும் தரவில்லை. கடந்த ஆடி மாதம் மருமகன் அழைப்பு நிகழ்ச்சிக்கு கிராமத்தில் இருக்கும் அனைவரையும் தாத்தாவும், சித்தப்பாவும் அழைத்து விருந்து வைத்தனர். ஆனால் எங்களது குடும்பத்தை அவர்கள் ஒதுக்கி வைத்து விட்டனர். இதனால் எனது தாத்தா மீது இருந்த கோபத்தில் அவரிடம் ஏன் எனது குடும்பத்தை ஒதுக்கி வைத்துள்ளீர்கள் என கேட்டேன். அதற்கு அவர் எனக்கு கோபம் வரும் அளவுக்கு கேவலமாக பேசியதால் வெட்டி கொலை செய்தேன் என பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளார்.