திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வத்தலகுண்டுவில் இருந்து மதியம் 1.30 மணிக்கு ஆடலூருக்கு அரசு பேருந்து இயக்கப்படுகிறது. நேற்று முன்தினம் அரசு பேருந்து வழக்கம் போல ஆடலூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. சுமார் 3.45 மணிக்கு அரசு பேருந்து தடியன்குடிசைக்கு வந்து நின்றது. இதனையடுத்து பயணிகள் பேருந்தில் ஏற முயன்ற போது டிரைவரும், கண்டக்டரும் அவர்களை ஏற விடவில்லை. மேலும் பேருந்து தடியன்குடிசையிலேயே திரும்பி மீண்டும் வத்தலகுண்டுக்கு புறப்பட தயாரானதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து கேட்டபோது ஏற்கனவே தாமதமாகி விட்டதால் ஆடலூர் செல்ல இயலாது, வேறு வாகனங்களில் செல்லுங்கள் என டிரைவர் கூறினார். இதற்கிடையே பயணிகளுக்கு சரியாக பதில் கூறாமல் டிரைவர் பேருந்து நிற்கையில் அமர்ந்தபடி புகைப்பிடித்து கொண்டிருந்ததை சிலர் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். இதுகுறித்து வத்தலகுண்டு அரசு போக்குவரத்து கழகம் விசாரணை நடத்தி வருகிறது.