ஹைதராபாத் ஜூபிலி ஹில்ஸ் பகுதியில் மோட்டார் சைக்கிளில் செல்லும் பெண்களை மயில் இறகு கொண்டு தொந்தரவு செய்த மூன்று இளைஞர்களை காவல்துறை கைது செய்துள்ளது. இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர், இளைஞர்களை எதிர்த்து கேள்வி எழுப்பி, அவர்களின் செயலை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பகிர்ந்ததை அடுத்து, காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்தது.

எக்ஸ் பயனர் அனிகேத் ஷெட்டி, தனது காரில் சென்று கொண்டிருந்தபோது, மூன்று இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் பெண்களை பின்தொடர்ந்து, மயில் இறகு கொண்டு அநாகரிகமாக தொடுவதை கண்டார். உடனடியாக அவர்களை எதிர்த்து கத்தி, இந்த தவறான செயலை நிறுத்துமாறு கூறினார்.

அனிகேத் தனது எக்ஸ் பதிவில், “இந்த மூன்று கயவர்கள், முன்னால் சென்ற பெண்களை பின்தொடர்ந்து, மயில் இறகு கொண்டு தொந்தரவு செய்தனர். நான் காரின் ஜன்னலை இறக்கி கத்தியபோது நின்றனர். முன்னால் இருந்த கார் வழிவிடாததால் அவர்களை மேலும் துரத்த முடியவில்லை,” என குறிப்பிட்டார். மேலும், “இதை பார்க்கும்போது எரிச்சல் தாங்க முடியவில்லை. வீட்டுக்கு வந்த பிறகும் ஆத்திரத்தில் நடுங்குகிறேன். என் மனைவி இல்லையென்றால், நிச்சயம் சட்டவிரோதமாக ஏதாவது செய்திருப்பேன்,” என பதிவிட்டார்.

வீடியோவில், அனிகேத்தின் மனைவி மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை பதிவு செய்து, காவல்துறைக்கு தகவல் அளிப்பதாக கூறுவது பதிவாகியுள்ளது. அனிகேத்தின் பதிவு இணையத்தில் வைரலான சில மணி நேரங்களில், மாதாபூர் காவல் நிலையம் மூன்று குற்றவாளிகளையும் கைது செய்ததாக உறுதிப்படுத்தியது. “மூவரும் அடையாளம் காணப்பட்டு, மாதாபூர் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது,” என காவல் நிலையம் தெரிவித்தது.