பாட்னாவில் அரசுப் பள்ளியின் கழிவறையில் 5ஆம் வகுப்பு மாணவி தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாட்னாவின் சிட்கோஹ்ரா பகுதியில் உள்ள கன்யா மத்திய வித்யாலயா அமல்டோலா பள்ளியில், கார்டனிபாக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இந்த சம்பவம் நடந்தது.
மாணவி கழிவறைக்குள் சென்ற சிறிது நேரத்தில், அங்கிருந்து புகை எழுவதை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்கள் கண்டனர். அவர்கள் விரைந்து சென்று பார்த்தபோது, மாணவி மயங்கி விழுந்த நிலையில், பலத்த தீக்காயங்களுடன் இருந்தார். உடனடியாக மாணவியை மீட்டு, பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு (PMCH) கொண்டு சென்றனர். அவரது நிலை தற்போது கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சம்பவம் பரவியதும், மாணவியின் குடும்பத்தினர் பள்ளிக்கு விரைந்து வந்து, பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தால் இந்த சம்பவம் நடந்ததாக குற்றம்சாட்டினர். ஆத்திரமடைந்த குடும்பத்தினரும், உள்ளூர் மக்களும் பள்ளியின் ஊழியர்கள் அறையை சேதப்படுத்தி, காவல்துறையினருடன் மோத முயன்றனர்.
கார்டனிபாக் காவல் நிலைய அதிகாரிகள் உடனடியாக விரைந்து விசாரணையை தொடங்கினர். பாட்னா மத்திய எஸ்.பி. திக்ஷா, மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாகவும், பள்ளி ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினரின் வாக்குமூலங்களை பதிவு செய்வதாகவும் தெரிவித்தார்.
மாணவியின் மனநிலை குறித்து வகுப்பு தோழர்களிடமும், சம்பவத்தின் பின்னணியை அறிய CCTV காட்சிகளை ஆய்வு செய்து வருவதாகவும் காவல்துறை தெரிவித்தது. மாணவி எவ்வாறு தீப்பற்றக்கூடிய பொருளை பெற்றார், இது தற்கொலையா? அல்லது வேறு காரணமா? என பல கோணங்களில் விசாரணை நடைபெறுகிறது. இந்த சம்பவம், பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து பெரும் கவலையை எழுப்பியுள்ளது.
