சென்னை மாவட்டத்தில் உள்ள புழல் ஏரியிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் ராட்சத குழாய் மூலம் மயிலாப்பூர், வியாசர்பாடி, கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் ரெட்டேரி அருகே செல்லும் ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டு 25 அடி உயரத்திற்கு தண்ணீர் பீய்ச்சி சாலையில் ஆறாக ஓடியது. இதுகுறித்து அறிந்த திரு.வி.க நகர் மண்டல பொறுப்பு பகுதி பொறியாளர் சுரேஷ்குமார் தலைமையிலான ஊழியர்கள் குடிநீர் குழாயில் இருக்கும் முக்கிய வால்வை அடைத்தனர்.

ஆனாலும் ஏற்கனவே குழாய் வழியாக வெளியேற்றப்பட்ட தண்ணீர் சாலையில் வீணாக ஓடியதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகவும் சிரமப்பட்டனர். இதனை தொடர்ந்து ஒப்பந்ததாரர்கள் 3 குழுவை வரவழைத்து குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்த பிறகு தண்ணீர் சீராக விநியோகம் செய்யப்பட்டது. மேலும் கான்கிரீட் பாதை அமைப்பதற்காக கான்கிரீட் ஏற்றி வந்த லாரி தவறுதலாக மோதியதால் குழாயில் உடைப்பு ஏற்பட்டது தெரியவந்தது.